‘மேலும் ஆரோக்கியமான SG’ என்பது என்ன?
Click here for English, Chinese, Malay
‘மேலும் ஆரோக்கியமான SG’ (Healthier SG) திட்டம், மேம்பட்ட ஆரோக்கியத்தை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ள அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் துணைபுரிகிறது.
சிங்கப்பூரில், நாம் நல்ல சுகாதாரப் பராமரிப்பு முறையை உருவாக்கியுள்ளோம். ஆனால், அனைவரும் மேம்பட்ட ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் கொண்டிருப்பதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.
‘மேலும் ஆரோக்கியமான SG’ திட்டத்தின்வழி, அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நாங்கள் பின்வரும் வழிகளில் துணைபுரிவோம்.
a) உங்களுக்குப் பராமரிப்பு வழங்க தெரிவுசெய்யப்பட்ட உங்கள் குடும்ப மருத்துவரை அறிந்துகொள்ள துணைபுரிவோம்
b) உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொள்ள துணைபுரிவோம்
c) உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ள துணைபுரிவோம்
அனைவருக்கும் ஒரு குடும்ப மருத்துவர், ஒரு சுகாதாரத் திட்டம்
அனைத்து சிங்கப்பூரர்களும் தங்களுடைய குடும்ப மருத்துவருடன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நம்பிக்கை மிகுந்த நல்லுறவைக் கொண்டிருக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
-
உங்கள் குடும்ப மருத்துவர் உங்களுடன் சேர்ந்து செயல்பட்டு, உங்களுக்கான தனிப்பட்ட சுகாதாரத் திட்டத்தை வகுத்துக் கொடுப்பார். உங்கள் சுயவிவரங்களைப் பொறுத்து, நீங்கள் தேசிய அளவில் பரிந்துரைக்கப்படும் சுகாதாரப் பரிசோதனைகளுக்கும் தடுப்பூசித் திட்டங்களுக்கும் செல்லுமாறு பரிந்துரைக்கப்படுவீர்கள்.
-
உங்களுடைய அனைத்துப் பராமரிப்புத் தேவைகளுக்கும், உங்கள் சுகாதார இலக்குகள் பற்றிக் கலந்து ஆலோசிப்பதற்கும், நீங்கள் தெரிவுசெய்த உங்களுடைய குடும்ப மருத்துவரை அடிக்கடிச் சென்று பார்க்கும்படி ஊக்குவிக்கப்படுவீர்கள்.
-
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், நீங்கள் தெரிவுசெய்த குடும்ப மருத்துவர் உங்கள் சுகாதார நிலை பற்றி உங்களுடன் கலந்து ஆலோசித்து, உங்களுக்கு இருக்கக்கூடிய சுகாதார அக்கறைகள் குறித்தும் ஆலோசனை கூறுவார்.
மேம்பட்ட சுகாதாரத்திற்கான ஆதரவுக் கட்டமைப்பு
மூன்று வட்டாரச் சுகாதாரக் குழுமங்கள் – சிங்ஹெல்த், தேசிய பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பு (NUHS), தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் (NHG) ஆகியவை தத்தம் வட்டாரங்களில் ஒருங்கிணைந்த சுகாதார, சமுதாயக் கட்டமைப்பை உருவாக்க முற்படும்.
அவை சுகாதார மேம்பாட்டு வாரியம் (HPB), ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (AIC), மக்கள் கழகம் (PA), சிங்கப்பூர் விளையாட்டு மன்றம், சமுதாய – சமூகப் பங்காளிகள் முதலான பங்காளி அமைப்புகளுடன் இணைந்து உங்கள் சுகாதார இலக்குகளுக்கு ஆதரவளிக்கும்.
முதற்கட்டமாக, நீங்கள் மேலும் அதிகமான உடற்பயிற்சி நடவடிக்கைகளையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களையும் பெற இயலும். நீங்கள் உங்களுக்கு உகந்த நடவடிக்கைகளைத் தெரிவு செய்யமுடியும்.
நீங்கள் வயதில் பெரியவராக இருந்தால், நீங்கள் எவ்வாறு வட்டாரத்தில் உள்ள மூத்தோர் பராமரிப்பு நிலையம் போன்றவற்றில் நடைபெறும் சுகாதார நடவடிக்கைகள், திட்டங்கள் ஆகியவற்றில் கலந்துகொள்ளலாம் என்பது பற்றி வட்டாரச் சுகாதாரக் குழுமங்களும் உங்கள் குடும்ப மருத்துவரும் உங்களுக்கு அறிவுறுத்துவார்கள்.
‘மேலும் ஆரோக்கியமான SG’ திட்டம் பற்றி 2022 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுக் குழு விவாதத்திற்கான சுகாதார அமைச்சரின் உரையில் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் என்ன செய்யலாம்?
மேலும் ஆரோக்கியமாக உங்களை வடிவமைக்க உதவும் ‘மேலும் ஆரோக்கியமான SG’ திட்டம் பற்றிய உங்களுடைய கருத்துகளை வரவேற்கிறோம்.
அதே வேளையில்,
-
‘வாழ்நாளுக்கான சுகாதாரப் பரிசோதனை’ திட்டத்தின்கீழ் செலவு கட்டுப்படியான சுகாதாரப் பரிசோதனைக்கு நீங்கள் இன்னும் செல்லவில்லை என்றால், அதற்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்களா என்பதைக் கண்டறிய, இங்கே சொடுக்குங்கள்.
-
ஆரோக்கியமாக இருங்கள்! மேல்விவரங்களுக்கு, Healthy 365, Health Hub ஆகிய செயலிகளைப் பதிவிறக்கம் செய்யுங்கள்!